ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவின் தளபதிகள் யேமனில் இருந்துகொண்டு செங்கடலில் ஹூதி தாக்குதல்களை வழிநடத்தவும் மேற்பார்வை செய்யவும் நேரடியாக உதவுவதாக ராய்ட்டர்ஸ் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

IRGC கமாண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஒவ்வொரு நாளும் செங்கடல் வழியாகப் பயணிக்கும் கப்பல்களில் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களை இணங்கண்டு தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகள் தொடர்பில் பூரண அறிவு, தரவுகள் மற்றும் உளவுத்துறை ஆதரவை வழங்கி வருவதாகவும் இதற்கு முன் இடம்பெற்ற ஹூதிகளின் தாக்குதல்களின் பின்னணியில் இவர்களே இருந்துள்ளதாக ஆதாரங்களை சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நவம்பர் மாதம் முதல் வணிகக் கப்பல்களை குறிவைக்கத் தொடங்கிய ஹூதிகளுக்கு ஈரான் உயர்தர ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், துல்லியமான தாக்குதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக ராய்ட்டஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஈரானிய தளபதிகள் யேமனுக்கும் பயணம் செய்ததாகவும், செங்கடல் தாக்குதல்களுக்கு தலைநகர் சனாவில் ஒரு கட்டளை மையத்தை அமைத்ததாகவும் முக்கிய ஆதாரமொன்றை சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

செங்கடலில் கப்பல் போக்குவரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் ஈரான் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளதாகவும், ஹூதிகள் கப்பல்களைக் குறிவைப்பதற்கு அதன் உளவுத்துறை முக்கியமானது என்றும் வாஷிங்டன் கடந்த மாதம் கூறியிருந்தது.

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தனது வாராந்த செய்தி மாநாட்டில் , ஹூதிகளின் செங்கடல் தாக்குதல்களில் ஈரானுக்கு தொடர்பு இல்லை என்று பலமுறை மறுத்துள்ளார். அத்துடன் IRGC மக்கள் தொடர்பு அலுவலகமும் இது தொடர்பில் பதிலளிக்கவில்லை.

செங்கடல் தாக்குதல்களை வழிநடத்துவதில் ஈரானிய அல்லது ஹிஸ்புல்லாவின் தலையீடு இல்லை என்று ஹூதி செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம் மறுத்தார். அத்துடன் இது தொடர்பில் வினவியாதற்கு ஹிஸ்புல்லாவின் பேச்சாளர் பதிலளிக்கவில்லை.

1980களில் சவூதி அரேபியாவின் சன்னி பிரிவின் செல்வாக்கிற்கு எதிராக ஆயுதமேந்திய குழுவாக 1980களில் தோன்றிய ஹூதிகள், தாங்கள் இஸ்ரேலுடன் தொடர்புடையவர்கள் அல்லது இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்வதாகக் கூறும் வணிகக் கப்பல்களைத் தாக்கி ஹமாஸை ஆதரிப்பதாகக் கூறுகின்றனர்.

அவர்களின் தாக்குதல்கள் யேமனுக்கு அப்பால் உள்ள பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாக ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதித்துள்ளது. இதனால் தற்போது யெமனில் உள்ள ஹூதிகளின் இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கூட்டணி படை வான்வழித் தாக்குதல்களைத் ஆரம்பித்துள்ளது. காஸாவில் போருடன் தொடர்புடைய மோதல் தற்போது பிராந்திய அளவில் பரந்துள்ளது.