குற்ற புலனாய்வு பிரிவினர் என்று கூறி கம்பஹா, மல்வதுஹிரிபிட்டிய,கஹடான கனராம விகாரைக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர் பிக்கு ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தற்காலிகமாக விகாரைக்கு சேவைக்கு வந்த 45 வயதான கலுபளுவாவே தம்ம ரத்ன தேரரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மு.ப 11.45 மணிக்கு நடந்துள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தேரரை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

போதைபொருள் இங்கே இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறி வந்த குறித்த குழுவினர் விகாரையில் இருந்தோரை துப்பாக்கியை காட்டி சோதனையிட்டு மிரட்டியுள்ளதுடன்
முடியுமானால் சுடுமாறு தேரர் கூறியதை அடுத்து துப்பாக்கி பிரயோகம் நடந்துள்ளது.

மோட்டார் வாகனத்தில் வந்த நான்கு பேர் டி56 ரக துப்பாக்கியை கொண்டு இந்த கொலையை செய்துள்ளதாகவும் இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த தேரர் சோதிடம்,மந்திர செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் இதன்படி தனிப்பட்ட காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தற்போது குற்றவாளியை கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.