எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் பௌசர் உரிமையாளர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலையேற்றத்திற்கு இணையாக தமக்கான போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் (SLPPTOA) தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் காரணமாக இன்றைய தினத்தில் சுமார் 800 பௌசர்கள் போக்குவரத்தில் ஈடுபடாது என சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லாதமையினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்ஹவிடம் வினவியபோது, எரிபொருள் பௌசர் போகுவரத்துக்கான கொடுப்பனவை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.