அண்மையில் தீயினால் பாதிக்கப்பட்ட மோதர, மாதம்பிட்டிய , கஜிமா தோட்டத்தில் வசிக்கும் 214 பேர் வீடொன்றைப் பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கஜிமா தோட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கிய அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நகர மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி அவர்களுக்கு வீடுகளை வழங்க முடியாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்குள்ளான இந்த காஜிமா தோட்டம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது மற்றும் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த காணியில் அரசியல் தலையீடு காரணமாக சுமார் 291 அங்கீகரிக்கப்படாத குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.