தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர்நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்த உத்தரவை கோரி நேற்று (29) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களில் ஒன்றை பேராயர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்பு பேரவை மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மற்றும் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள பல வழக்குகளை கருத்தில் கொண்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொலிஸ் அதிகாரிகள் முன்னாள் இராணுவ வீரரை சித்திரவதை செய்து சட்டவிரோதமாக கைது செய்ததன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் டிசம்பர் 14 இல் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.