இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் குசல் பெரேரரா உட்பட கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு அண்மையில் பொலிஸ் பதவிகள் வழங்கப்பட்டன. எனினும் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் நியமனங்கள் சட்டத்திற்கு புறம்பானது எனவும் சட்டத்திற்கு முரணான வகையில் தலைமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அந்த பதவிகளுக்கு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை இலங்கை காவல்துறையிடம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக ஆட்சேர்ப்பு நடைமுறையின்படியே காவல்துறையில் நியமனங்கள் வழங்கப்பட்டாலும் காவல்துறை தலைமை பரிசோதகர், மற்றும் தலைமைக் காவல் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைமுறை இல்லை என்றும் அவர் கூறினார்.

துணை சேவை அடிப்படையில் கிரிக்கெட் வீரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டாலும், துணை சேவையின் ஊடாக துணை அத்தியட்சகர் பதவியை விட உயர் பதவிகள் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கிரிக்கெட் வீரர்கள் துணை சேவையின் அடிப்படையிலேயே பொலிஸில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நியமனங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு முரணானது அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.