நிகழ்நிலை (online) காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகும். உயர்நீதிமன்றம் பரிந்துரைகளை மதிக்காமல் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றி இருக்கிறது. சபாநாயகர் கையொப்பமிட்டாலே இந்த சட்டமூலம் அமுலாகும். எனவே இந்த சட்டமூலத்தை சான்றுப்படுத்தி சபாநாயகர் கையொப்பமிடக் கூடாது. சபாநாயகர் கையொப்பமிடுவதை தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சிகள் விரைவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து பேசவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய குரல் இணையத்திற்கு அவர் குறிப்பிடுகையில்,

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மக்களின் பேச்சுரிமைக்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறது. மக்களின் விமர்சனங்களுக்கு தைரியமாக முகங்கொடுக்க வேண்டும்.ஆனால் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க அரசாங்கத்திற்கு தைரியம் இல்லை. இதன்காரணமாகவே இந்த சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

மேலும் இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகும். அரசியலமைப்பு முரணான சரத்துக்களை கொண்டதாக இந்த சட்டமூலம் காணப்படுகிறது. மேலும் ஒருசில இணைய சேவைகளை தடை செய்யுமாறு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அவற்றை அரசாங்கம் செய்யவில்லை. மேலும் உயர்நீதிமன்ற பரிந்துரைகள் அல்லாத பல திருத்தங்களை அரசாங்கம் குழுநிலையின் போது செய்தது. உயர்நீதிமன்றம் செய்ய வேண்டும் என்று கூறியவைகளை செய்யாமல் உயர்நீதிமன்றம் நிராகரித்தவைகளையும் பரிந்துரைக்காத பல பாரதூரமான திருத்தங்களையும் செய்திருகிறது. இத்தகைய நடவடிக்கை உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

ஆசிய இணைய நிறுவனம் எச்சரித்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அரசாங்கம் இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எச்சரித்த வேளை அந்நாட்டு அரசாங்கம் இவ்வாறானதொரு சட்டத்தை வாபஸ் பெற்றது. ஆனால் இலங்கை அவ்வாறு செய்யவில்லை. இவ்வாறான நடவடிக்கையால் சமூக ஊடகங்கள் இலங்கையை புறக்கணித்து சென்றுவிடும். அதனால் பொருளாதாரத்திற்கே நேரடி பாதிப்புகள் ஏற்படும். இதன்போது இலங்கை உலகளவில் தனிமைப்பட்டு விடும்.

ஆகவே இந்த Online சட்டமூலத்தை சான்றுப்படுத்தி சபாநாயகர் கையொப்பமிடக் கூடாது. இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டு எதிரணிகள் சபாநாயகரை சந்தித்து பேசவுள்ளோம் என்றார்.