ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைய போவதாக வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சர்வதேச மற்றும் உள்நாட்டிலுள்ள பணம் படைத்தோரின் ஆதரவுடன் சமூக வலையமைப்புகளை பயன்படுத்தி இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. சஜித் பிரேமதாச மீது பல கோணங்களில் சேறு பூசப்படுகின்றன. அனைத்து கணிப்புகளிலும் சஜித்தே முன்னிலை வகிக்கும் நிலையில் மக்கள் வதந்திகளை நம்பாது உண்மைகளை கண்டறிய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

மேலும் ரணிலுடன் எமக்கு தனிப்பட்ட கோபமில்லை. கொள்கை அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து வந்தோம். ஐ.தே.க.வின் கொள்கைகளை ரணில் நாசம் செய்தார். ஐ.தே.கவின் கொள்கையை சர்வதேசத்திடம் அடமானம் வைத்தார். இவ்வாறான போக்குகளுக்கு எதிராகவே கட்சியினுள் உள்ளக போராட்டத்தில் ஈடுப்பட்டோம். அதன் விளைவாகவே ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சோசலிஸ கொள்கையினால் இதுவரை எந்த நாடும் முன்னேறவில்லை. கிழக்கு ஜேர்மன் உட்பட பல நாடுகளுக்கு சோசலிஸத்தால்  பஞ்சமே மிஞ்சியது. இந்நிலையில் அனைத்து நாடுகளுடனும் தொடர்பு கொள்ள கூடிய தலைவர்கள் ஐ.ம.ச.வில் உள்ளனர். தற்போது போட்டி களத்தில் சிறந்த, திறமையான அணி எம்மிடமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா காலத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி ரணில் கூட மூச்சு திட்டத்தின் ஊடாக எதிர்க்கட்சி தலைவரிடம் உதவி கோரியிருந்தார். இதுவரை எங்கும் இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. எதிர்க்கட்சியில்  இருந்து கொண்டுமக்களுக்கு சேவை செய்த, சாதாரண மக்கள் மீது அக்கறையுள்ள ஒரே தலைவர் சஜித் பிரேமதாசவாகும். ஜனாதிபதி கோரியதன்படி குறுகிய காலத்தில் மருந்துகளை சஜித் கொண்டு வந்தார். ஜனாதிபதிக்கு இல்லாத சர்வதேச ஆதரவு சஜித்துக்கு உள்ளமை இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது என்றார்

பிட்ட கோட்டே கட்சி தலைமையகத்தில் இன்று (04)  நடந்த ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.